தரமான குழந்தை
தரம் என்றால் என்ன?
ஒரு செயலை எப்படி செய்கிறீர்கள் என்பதுதான் தரம்.
எந்த ஒரு தொழிலிலும் தரம் முக்கியம். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை விட எப்படி செய்கிறீர்கள் என்பதுதான் தரம். தரம் மதிக்கப்படும். எதிர்பார்க்கப்படும்.
ஒரு செயல் இப்படித்தான் அமையும்.ஒரு பொருள் இப்படித்தான் இருக்கும் என்னும் இயல்பைக்காட்டிலும் சிறப்பாக அமைவது தரம்.
உங்களது குழந்தையின் நடவடிக்கைகள் தரமாக அமைய நீங்கள் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தரமான நடவடிக்கைகளை கொண்ட குழந்தை சிறந்த மனிதனாக வளரும். வாழ்க்கையில் வெற்றி பெறும்.
அவர்கள் இளமையாக இருக்கும்போதே அவர்களை தரமானவர்களாக பண்படுத்த தொடங்க வேண்டும்.
ஒரு குழந்தை தரமாக வளர்வதற்குப் பள்ளி சூழ்நிலை முக்கியமான காரணியாக விளங்குகிறது.
குழந்தை நாளுக்கு நாள் வளர்ச்சி அடைய வேண்டும். உங்களது குழந்தையின் கல்வி தரமாக இருப்பதும், உங்களது குழந்தைக்கு சிறப்பான் ஓர் இலக்கை ஏற்படுத்தி தருவதும் உங்களது கடமை என உணருங்கள்.
கல்வி தரமாக இருப்பதும், சரியான இலக்கும் குழந்தை தான் மேம்படுவதற்குரிய வழிகளை கண்டறியும் திறனை அளிக்கும்.
எது எல்லாவற்றிலும் சிறந்ததோ அதை நோக்கி குழந்தையை உந்தித் தள்ள வேண்டும். இந்த அளவிற்கு இருந்தால் பரவாயில்லை என திருப்திப்பட்டுக் கொள்ளக் கூடாது.
ஒரு பொருளை நீங்கள் வாங்கும்போது தரமாக இருக்க வேண்டும் என்பதற்காக எப்படி அக்கறையுடனும் பொறுமையாகவும் தேர்வு செய்கிறோம்?
குழந்தையின் கல்வியும் நடவடிக்கையும் தரமாக அமைய அதே அளவு அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.
நாம் செய்யக் கூடிய காரியம் அல்லது உருவாக்கும் பொருள் தரமாகவும் நேர்த்தியாகவும் இருக்க வேண்டியது அவசியம். ஆனால், நம்மில் பெரும்பாலானோர் இதை மிகத் தாமதமாகவே புரிந்து கொள்கிறோம்.
நமது குழந்தைகளும் தாமதமாக புரிந்து கொள்ள விடக்கூடாது. இளமையில் இருந்தே குழந்தையின் வேலைகள் நேர்த்தியாக அமையும்படி கற்றுக் கொடுக்க வேண்டும்.
குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்யும்போது கவனியுங்கள்.
அடித்தல் திருத்தலோடு, கிறுக்கலான கையெழுத்தோடும் வீட்டுப்பாடத்தை செய்யலாம்.
அடித்தல் திருத்தல் இல்லாமல், அழகான கையெழுத்திலும் வீட்டுப்பாடத்தை செய்யலாம்.
கடமைக்கு வீட்டுப்பாடத்தை செய்யாமல், அதை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்யும் பழக்கத்தைக் கற்றுக் கொடுங்கள்.
செல்போன் என்பது பேசுவதற்கும், பேசுவதை கேட்பதற்கும்தான்.
ஆனால், அதற்காக ஏதேனும் ஒரு செல்போனை வாங்கி விடுவதில்லை.
அதன் தரம், நேர்த்தி, வடிவமைப்பு சுருக்கமாக சொன்னால் அதனால் என்ன உபயோகம் என்று பார்ப்பதை விட, எப்படி செய்யப்பட்டிருக்கிறது என்பதைத்தான் நாம் அதிக அக்கறையோடு கவனிக்கிறோம்.
சிறப்பான வடிவமைப்பு நம்மை அந்தப் பொருளை வாங்க தூண்டுகிறது.
அப்படித்தான் நமது குழந்தைகளும்.
குழந்தைகளின் நடவடிக்கைகள் அல்லது அதன் செயல்கள் நேர்த்தியாக இருக்கும்போது எல்லோராலும் பாராட்டப்படும்.
அந்த பாராட்டு, குழந்தையின் மனதில் தனது காரியங்களை மேலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற உந்துதலை கொடுப்பதோடு, குழந்தைக்குத் தன்னம்பிக்கையையும் கொடுக்கும்.
இதோ பாருங்கள், எப்படி அழகாக செய்திருக்கிறேன் என்று பெருமையோடு சொல்லிக்கொள்ள அசைப்படும்.
குழந்தை தன்னை சிறந்தவனாக காட்டிக்கொள்ளவே விரும்ப வேண்டும். அத்தகைய விருப்பத்தை குழந்தைக்குப் பயிற்று விக்க வேண்டும். அந்த விருப்பம் குழந்தையின் நடவடிக்கைகளை, செயல்களை தரமாக மாற்றும்.
ஒரு பொருள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அந்தப் பொருள் தயார் செய்யப்படும் விதமும். தயார் செய்யப்படும் விதம் சரியில்லை என்றால் பொருளும் சரியக இருக்காது.
உங்களது குழந்தை வீட்டுப்பாடத்தை சரியாக செய்கிறானா? செய்கிறாளா? என்பதை கவனியுங்கள்.
பரீட்சைக்கு தயாராகும்போது, நீண்ட நாட்களுக்கு முன்பிருந்தே படிக்க பயிற்றுவியுங்கள். தேர்வுக்கு முதல்நாள் வரை விளையாடிக் கொண்டிருந்து விட்டு, கடைசி நாளில் அவசர அவசரமாக படிப்பது சரியானதல்ல என புரிய வையுங்கள்.
கடைசி நேரத்தில் செய்யும் வேலை தரமாகவும் நேர்த்தியாகவும் அமையாது என உங்கள் குழந்தையை உணர வையுங்கள்.