ஆசை… கோபம்… களவு… காமம்
![](https://palsuvai.in/wp-content/uploads/2020/06/sinthanaigal-780x405.jpg)
மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் `நியாயம் எது? நீதி எது? தர்மம் எது?’ என்பது சரியாகத் தெரியவில்லை. அதனால் தான் மனிதர்களிடையே கருத்து வேறுபாடு உருவாகிறது. ஒருவனுக்கு, தான் என்ன சொல்கிறானோ அது தான் சரியென்று படுகிறது. மற்றொருவனுக்கு அவன் என்ன சொல்கிறானோ அதுவே சரியென்று தோன்றுகிறது. ஆனால், இருவருக்குமே எது சரியென்று தெரியவில்லை. அதனால் தான் அவர்களுக்குள் கோபம் ஏற்படுகிறது.
இந்த கோபம் `உண்மை என்ன’ என்று அறியாமல் ஏற்படுவதால் `அறியாமல் வரும் கோபம்’ என்றும் கூறலாம்.
உதாரணமாக, ஒரு குழந்தை முகம் பார்க்கும் அழகிய கண்ணாடியை உடைத்து விடுகிறது. உடனே, குழந்தையை பார்த்து, `உனக்கு அறிவில்லையா?’ என்று திட்டுகிறீர்கள், கோபப்படுகிறீர்கள். நீங்கள் அவ்வாறு குழந்தையிடம் கோபப்படும்போது நீங்கள் திட்டும் வார்த்தைகள் வேண்டுமானால், அதற்கு புரியாமல் இருக்கலாம். ஆனால், அது உங்கள் முகபாவத்தை வைத்து நீங்கள் கோபப்படுகிறீர்கள் என்பதைக் கண்டுபிடித்து விடும். அதனால் குழந்தை உங்களைக் கண்டாலே பயப்பட ஆரம்பிக்கும்.
உங்களை பார்க்கும் போது, நீங்கள் திட்டும் காட்சி தான் அதன் நினைவிற்கு வரும். அதனால், நீங்கள் முதலில் குழந்தையின் கையில் அவ்வாறு உடையக்கூடிய பொருளைக் கொடுத்திருக்கவே கூடாது. அப்படி கொடுத்திருந்தாலும் அதை குழந்தை உடைக்காத வண்ணம் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை என்று எண்ண வேண்டும். குழந்தையின் கைகளுக்கு எட்டாதவாறு, அந்த பொருளை உயரமான இடத்தில் வைக்க வேண்டும். அத்தனை பாதுகாப்பையும் தாண்டி அந்த பொருளைக் குழந்தை உடைத்து விட்டாலும் கூட, அந்த குழந்தையிடம் கோபத்தைக் காட்டாமல், அதற்கு புரியவைக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு முறை கோபம் வரும் போதும், அந்த நேரத்தில் கோபப்படுவதால் உண்டாகும் பலன் என்ன என்று சிந்தித்து பார்க்கவேண்டும். தான் நினைப்பது எல்லாமே சரி என்பது தான் எல்லோருக்கும் மிகவும் பிடித்த விஷயமாகிறது. அதைச் செய்வதற்கு தான் அனைவரும் ஆசைபடுகின்றனர். யாருக்கும் தெரியாமல் அதைச் செய்த பின் தங்கள் செய்த தவறை மறைக்க அதை நியாயபடுத்தி பேசுகின்றனர். அல்லது பிரமாதமாக ஒன்றும் தெரியாதது போல் நடிக்க ஆரம்பிக்கின்றனர். இதனால், உண்மையாக நடந்து கொள்பவர்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒரு செயலை `எப்படி செய்தால் அதில் வெற்றி பெற முடியும்’ என்று தெரியவேண்டும். செய்ய முடிந்தால் தான் அதைபற்றி சிந்திக்க வேண்டும். முடியவில்லை என்றால், அதற்கு முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து முயற்சி செய்யும் போது அதற்கு ஒரு `முடிவுநிலை’ ஏற்படும். அதைத் தான் `அறிவு’ என்று சொல்கிறார்கள்.
எந்த ஒரு செயலையுமே பொதுநோக்கு பார்வையில் இருந்து சிந்தித்து பார்த்து, ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும். நமக்கு நம் செயல்களே நன்றாகத் தெரிவதால், அதையே மீண்டும், மீண்டும் செய்யாமல் புதிய கோணத்தில் சிந்தித்து செயல்பட வேண்டும். அப்போது தான் நம் மனம் சீக்கிரமாக ஒருமுகப்படும். அதனால், புதிய ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்க முடியும். அப்படி நடக்க முடியவில்லை என்றால், நம் மனம் எப்போதும் போல், கடந்த கால தவறுகளை பற்றியே சிந்தனை செய்து துக்கபட்டுக் கொண்டே இருக்கும். ஆசை, கோபம், களவு, காமம் போன்ற எல்லா துன்பம் தரும் செயல்களிலும் இதே போன்ற வழிமுறைகளைக் கையாளும் போது, கல்வி, செல்வம், வீரம், தொழில் என்று சகலவசதிகளும் கிடைக்க பெற்று வாழ்க்கை பிரகாசமாகி விடும்.