அழகான மனைவியை தேர்ந்தெடுக்கும்போது…
அனிதாவுக்கு 30 வயது இருக்கும். திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தாயும் ஆகிவிட்டாள். ஆனாலும், தோற்றத்தில் கல்லூரி மாணவி போலவே `சிக்’கென்று காணப்படுவாள்.
ஆனால், அவளது கணவர் ராமையாவோ அவளுக்கு நேரெதிர். இவரது அழகுக்கும், அவளது அழகுக்கும் சம்பந்தமே இருக்காது. இருந்தாலும், நல்லபடியாகத்தான் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது.
திடீரென்று ராமையாவுக்கு இவள்மீது சந்தேகம். நாட்கள் செல்லச் செல்ல சந்தேகம் அதிகமானது.
அன்று அவள் வேலைக்குச் சென்றபோது, அவளுக்கு தெரியாமலேயே பின்தொடர்ந்து சென்றார். வீட்டுக்கு அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து அவரது கழுகு பார்வை பின்தொடர்ந்தது.
பஸ் நிறுத்தத்தில் அவள் நின்று கொண்டிருந்தபோதே சில ஜொள்ளர்கள் அவளை `ஜொள்’ விட்டனர். இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டாஸ் அணிந்திருந்தாள் அனிதா. இடது பக்க தோளில் `ஹேன்ட் பேக்’ தொங்கிக் கொண்டிருந்தது.
அவள் கல்லூரி மாணவியாகத்தான் இருப்பாள் என்று கணித்த சில இளைஞர்கள், அவளிடம் ஐ லவ் யூ… சொல்ல எண்ணி, அதற்கான முன்னோட்ட முயற்சிகளில் ஈடுபட அவளுக்கு அருகில் வந்தனர்.
இதையெல்லாம் மறைந்திருந்து கவனித்துக் கொண்டிருந்த ராமையா, அவள் ஏறிய பஸ்சிலும் ஏறிக்கொண்டு, ஒரு ஓரமாக அமர்ந்து அவளை கண்காணித்தார். பஸ்சில் கூட்டம் அதிகம் இருந்ததால் அவளால் கணவன் பின்தொடர்வதை கண்டுபிடிக்க முடியவில்லை.
பஸ்சுக்குள் ஓரமாக ஒதுங்கி நின்ற சில சபலங்கள் கூட, அனிதாவை பார்த்ததும் அவளை நெருங்கி வந்து நின்று கொண்டனர். டிரைவர் எபோது பிரேக் போடுவார்… எப்போ அவளை உரசலாம்… என்று காத்திருந்தனர். அதற்கான வாய்ப்பு கிடைத்தபோது உரசிக் கொண்டு மகிழ்ந்தனர்.
அந்தநேரம் டிப்டாப்பான ஒரு இளைஞன் பஸ்சில் ஏற, அனிதாவை பார்த்ததும் அவன் புன்னகைத்தான். பதிலுக்கு இவளும் லேசாக சிரித்து வைத்தாள். இதையும் கவனித்துவிட்டார் ராமையா. `இவன் யாராக இருப்பான்? ஒருவேளை திருட்டுக்காதலனாக இருப்பானோ..?’ என்று கூட சந்தேகித்தார்.
இப்போது அவன் அனிதாவை நெருங்கி வந்து நின்றான். அவன், தன்னுடன் பணிபுரியும் சக ஊழியன் என்பதால் ஒன்றிரண்டு வார்த்தைகளை பேசிவிட்டு திரும்பிக் கொண்டாள். ஆனால், ராமையாவின் பார்வைக்கு அவன் சந்தேகத்துக்குரியவனாகவே தெரிந்தான். அடுத்த பஸ் நிறுத்தத்திலேயே இறங்கிக் கொண்டார்.
அன்று இரவு அலுவலகம் முடிந்து, வீட்டுக்கு திரும்பி வந்த அனிதாவை, `இனி வேலைக்கு செல்ல வேண்டாம்` என்று தடை விதித்துவிட்டார் ராமையா. அந்த சம்பவத்திற்கு பிறகு அவர்களுக்குள் பிரச்சினைகள் அதிகமானது. சிலநேரங்களில் மனைவியை கை நீட்டி அடித்தும் விட்டார்.
அதன்விளைவு… அவள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு தாய் வீட்டுக்கே சென்று விட்டாள்.
– இப்படி ராமையா போன்று அழகான மனைவியை தேடிபிடித்து வாழ்க்கை துணைவியாக்கி, மனைவியின் அந்த அழகாலேயே தங்களது வாழ்க்கையை கெடுத்துக்கொள்ளும் கணவன்மார்களின் எண்ணிக்கை இப்போது அதிகமாகி விட்டது.
முதலில் அழகுக்காக ஆசைபடும் அவர்கள், அந்த அழகாலேயே சந்தேகத்தையும் தாங்களாகவே வரவழைத்துக் கொள்கிறார்கள்.
வாழ்க்கையில் மனைவியின் மீது மட்டும் சந்தேகம் வந்துவிட்டால் அந்த சந்தேகம் எப்போது தோன்றியதோ, அப்போது முதல் வாழ்க்கையே நரகமாகிவிடும். அவள் ஆடை அணிந்து கொள்வதில் இருந்து… அவள் வெளிபடுத்தும் சிரிப்பு வரையில்… எல்லாமே சந்தேகமாகத்தான் தெரியும்.
இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படும்போது கணவன்மார்கள் என்ன செய்யலாம்? முதலில் சந்தேகம் என்ற வார்த்தையையே உங்கள் மனதில் இருந்து தூக்கியெறிந்துவிடுங்கள். உங்களவள், ஏதோ ஒரு சூழ்நிலையில் உங்களுக்கு அறிமுகம் இல்லாத ஒரு ஆணிடம் பேசிக் கொண்டிருந்தால், அவன் அவளுடன் தொடர்பு உள்ளவனாக இருப்பானோ..? என்ற மனநிலைக்கு வருவதையே தவிர்த்து விடுங்கள். அவள் அவனிடம் ஒரு தங்கை என்கிற முறையில் பேசலாம். அல்லது நட்பாகக் கூட இருக்கலாம். சந்தேகத்தின் முதல் படி, நீங்கள் பார்க்கும் பார்வை தான். அழகான மனைவியை தேர்ந்தெடுப்பதில் தவறில்லை. அவளை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே, அவளது அழகால் அவளை எந்த சூழ்நிலையிலாவது சந்தேகிப்போமா? என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்வது அவசியம். `என் அழகான மனைவியை நான் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும்’ என்று 100 சதவீதம் நீங்கள் நம்பினால் மாத்திரமே உங்கள் விருப்பபடி அழகான பெண்ணை திருமணம் செய்து கொள்ளுங்கள். பெண்கள் வேலைக்குச் செல்வது என்பது இப்போதைய சூழ்நிலையில் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அப்படிபட்ட சூழ்நிலையில் அவர்களுக்கு ஆண் நண்பர்கள் அறிமுகம் கிடைக்கத்தான் செய்யும். `என்னைத் தவிர வேறு எந்த ஆணிடமும் பேசக்கூடாது’ என்று மனைவியை நிர்பந்திக்கவும் முடியாது; அப்படி செய்யவும் கூடாது. மீறி நிர்பந்தம் செய்தால், அடுத்த கேள்வியாக, `என்னை நீங்கள் சந்தேகப்படுகிறீர்களா?’ என்று உங்கள் மனைவி கேட்டுவிடுவாள். இது தேவையா? நீங்கள் சந்தேகப்படுவது உங்கள் மனைவிக்கு தெரிந்துவிட்டாலே அவள் மிகவும் நொந்துபோய் விடுவாள். அதுவரை, உங்களிடம் ஆசைஆசையாய் அவள் பேசி வந்திருந்தாலும் கூட, உங்களது சந்தேக பார்வைக்கு பிறகு அவளது போக்கில் நிறைய மாற்றங்கள் தெரிய ஆரம்பித்துவிடும். முதலில் உங்களிடம் அதிகம் பேசுவதை குறைபாள். மகிழ்ச்சியான விஷயங்களைக்கூட உங்களிடம் பகிர்ந்து கொள்ள பயப்படுவாள். முடிந்தவரை உங்கள் மனைவியை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள். அவளது அழகை ஆராதனை செய்யுங்கள். அவள் பேசும் பேச்சுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கேளுங்கள். உங்களவள் எப்பொழுதாவது பியூட்டி பார்லருக்கு புறப்பட்டால், `நீயே நடமாடும் பியூட்டி பார்லர்தானே? ஏன் பியூட்டி பார்லருக்கு போக வேண்டும்?’ என்று கேட்டு ஐஸ் வையுங்கள். அவ்வப்போது அவளுக்கு பிடித்த ஆடையை வாங்கிக்கொடுத்து, `இந்த ஆடையில் ஐஸ்வர்யாராயையே மிஞ்சி விட்டாயே…’ என்று கேட்டு குளிர்வியுங்கள். இதுபோன்ற உங்களது செல்லச் சீண்டல்கள் அடிக்கடி தொடரட்டும். உங்களது எண்ணங்கள் இப்படிச் சென்று கொண்டிருந்தால், அங்கே சந்தேகம் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போய்விடும். எல்லாவற்றைம்விட முக்கியமாக, உங்களவளிடம் நீங்கள் ஒரு நல்ல கணவனாக மட்டுமின்றி எப்போதும் ஆதரவாய் இருக்கும் நண்பனாகவும் பழகுங்கள். `உனக்காகவே நான், எனக்காகவே நீ’ என்று அடிக்கடி சொல்லுங்கள். எப்பேர்பட்ட அழகியாக உங்கள் மனைவி இருந்தாலும், குட்டி போட்ட பூனையாக உங்களையே சுற்றிச் சுற்றி வருவாள்.